கொரோனா எதிரொலி: ஈரானில் சிக்கித்தவித்த 58 இந்தியர்கள் மீட்பு..!

206

கொரோனா வைரஸ் பரவி வரும் ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இன்று தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் இதுவரை 3136 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு, கொரோனா அறிகுறி தென்படும் நோயாளிகள் உடனடியாக அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. அவர்களை மீட்க இந்திய விமானப்படையின் விமானம் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது.

முதற்கட்டமாக இன்று காலை 58 இந்தியர்களுடன் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

விமானம் 58 பேருடன் புறப்பட்டபோது எடுத்த புகைப்படங்களுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.

‘சவாலான சூழ்நிலையில் செயல்படும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள இந்திய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு நன்றி. இந்திய விமானப்படைக்கு நன்றி. ஈரான் அதிகாரிகளின் ஒத்துழைப்பை பாராட்டுகிறேன். அங்கு சிக்கித் தவிக்கும் மற்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும் பணியாற்றி வருகிறோம்’ என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of