சுயேட்சை எம்.பி நடிகை சுமலதா பாஜகவில் இணைகிறாரா? – கர்நாடகா அரசியலில் பரபரப்பு

732

மண்டியா தொகுதியில் கர்நாடக முதல்வரின் மகனை வீழ்த்தி வெற்றிபெற்ற நடிகை சுமலதா இன்று பாஜக தலைவர்களை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா அவரது கணவர் வெற்றிபெற்ற மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் கட்சியிடம் மனு செய்தார். ஆனால், கூட்டணி உடன்பாட்டின்படி அந்த தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மேலிடம் கைவிரித்து விட்டது.

பின்னர், இந்த தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை சுமார் 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுமலதா தோற்கடித்தார்.

இதையடுத்து, சுமலதா பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் உள்ள தனது கணவரின் சமாதிக்கு வந்தார். அங்கு தான் எம்.பி.யாக வெற்றி பெற்ற சான்றிதழை சமாதியில் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு சுமலதா நிருபர்களிடம் கூறுகையில், “நான் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை மண்டியாவில் கூட்ட முடிவு செய்துள்ளேன். மண்டியா மக்கள் என் மீது அன்பு செலுத்தியுள்ளனர். அவர்கள் சுயமரியாதை உள்ள மக்கள். எனது வெற்றிக்கு பாடுபட்டவர்களை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனது கணவரின் பிறந்தநாளான வரும் 29-ம் தேதி என் தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளேன்.

எனக்கு காங்கிரஸ் கட்சி முன்னர் வாய்ப்பு அளித்திருந்தால் நான் இந்நேரம் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்திருப்பேன். அந்த கட்சிக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்திருக்கும். பா.ஜனதாவில் சேருவது குறித்து மண்டியா மக்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்வேன்” என்றார்.

இந்நிலையில், இன்று கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா ஆகியோரை சுமலதா சந்தித்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாம் மதித்து நடக்க வேண்டும். சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் சுயேட்சை வேட்பாளரான என்னை வெற்றிப்பெற வைத்த மண்டியா மக்களின் விருப்பப்படி எனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால், விரைவில் அவர் பாஜகவில் இணையலாம் என்ற எண்ணம் கர்நாடக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of