ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலாவெசியின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
நிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பீதியில், வீடுகளுக்குள்ளும், பிற கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு, சாலைகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓடினர். இருப்பினும் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவில் சுனாமி தாக்கியது. இந்த மோசமான பேரழிவில் சிக்கி 832 பேர் பலியாகினர் என கடந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளிவந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 1234 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த இயற்கை பேரிடரில் 500 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 16372 வீடுகளை இழந்து தவிப்பதாகவும் தேசிய பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.