செங்கோட்டையை பற்றி உங்களுக்கு தெரியாத இரகசியங்கள்

4938

டெல்லி என்றாலே பல இடங்கள் நமக்கு நினைவில் வரும். ஆனால் அதில் முதன்மையானது செங்கோட்டை என்றால் அது மிகையல்ல. சுதந்திர தின நாள் அன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் கொடி ஏற்றித் தொடங்கியது முதல் இந்த வழக்கமானது இன்று வரை நீடிக்கிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். இந்நிலையில், செங்கோட்டையின் சிறப்புகள் என்ன?, தெரியாத தகவல்கள் என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

டெல்லி என்றாலே செங்கோட்டை என்று சொல்லும் அளவுக்கு இன்று டெல்லியின் அடையாளமாக திகழும் இந்த வரலாற்றுச்சின்னம் 1638 – 1649-க்கு இடைப்பட்ட காலத்தில் தாஜ்மகாலைக் கட்டிய அதே ஷாஜகானால்தான் செங்கோட்டையும் கட்டப்பட்டது.

இந்தக்கோட்டையை வைத்திருந்த கடைசி முகலாய பேரரசர், பகதூர் ஷா II(இரண்டு) “ஜாபர்” ஆவார். முகலாயர்களின் ஆட்சியில் அவர்களின் பாதுகாப்பு திறமைகள் இருந்த போதிலும், 1857 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான எழுச்சியின் போது அவர்களால் செங்கோட்டையை தற்காத்துக் கொள்ளமுடியவில்லை.

1857 கலகத்தில் தோல்வியடைந்த பின்னர், 17 செப்டம்பர் அன்று ஜாபர் கோட்டையை விட்டு வெளியேறினார். ஆங்கிலேயரின் கைதியாக அவர் செங்கோட்டைக்குத் திரும்பிவந்தார். 27 ஜனவரி 1858 இலிருந்து ஜாபர் தீவிர நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அக்டோபர் 7 அன்று நாடு கடத்தப்பட்டார்.

19ம் நூற்றாண்டு வரை இக்கோட்டையில் புதிய கட்டுமானங்களும் அவ்வப்போது சேர்க்கப்பட்டிருக்கின்றன. சிவப்புக்கற்களால் கட்டப்பட்டு அப்பழுக்கற்ற தோற்றத்தை கொண்டுள்ள இந்த பிரம்மாண்ட கோட்டை உலகின் முக்கியமான ராஜகோட்டைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

சுமார்3 கி.மீ நீளத்துக்கு இந்த கோட்டை நீண்டுள்ளது. லாகூர் கேட் மற்றும் இந்தியா கேட் என்ற இரண்டு பிரதான வாயில்கள் இந்த கோட்டைக்கான வாசல்களாக அமைந்துள்ளன.

யுனெஸ்கோ அமைப்பின் மூலம் சர்வதேச பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெருமைக்குரிய அந்தஸ்தையும் இந்த கோட்டை பெற்றுள்ளது.

இந்த கோட்டைக்குள்ளே பல அற்புதமான கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் திவான் இ ஆம் என்பதும் திவான் இ காஸ் எனும் கட்டிடமும் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

இது தவிர மோதி மஸ்ஜித் எனும் மசூதி ஒன்றும் பின்னாளில் இந்த கோட்டைக்குள் கட்டப்பட்டுள்ளது.

இக்கோட்டையில் அமையப்பெற்றுள்ள மும்தாஜ் மஹால் என்ற பகுதி பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மாளிகையாகும். இது தற்போது ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகிறது.

மன்னராட்சி முடிந்து ஒன்றுபட்ட பரந்த இந்தியாவின் தலைநகராக விளங்கும் டெல்லி நகரில் வரலாற்று காலத்தின் சாட்சியமாகவும், புராதன கலைச்சின்னமாகவும் இது உள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1857 ஆம் ஆண்டில் சிப்பாய் கழகம் முடிவுக்கு வந்த பிறகு இக்கோட்டையில் ஆங்கிலேயே அரசு இக்கோட்டையை ஆக்கிரமித்து, இங்குள்ள பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். வெகு காலத்திற்கு பிறகு இந்த இடத்தின் ஒட்டுமொத்த அமைப்புகளில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் வெளிக்கொணரப்பட்டன.

இக்கோட்டையின் பரந்த நிலப்பரப்பு, கொத்தளங்கள் கோட்டை போன்றவற்றை உள்ளடக்கியதால் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்தக்கோட்டை முக்கியமான இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டது.நேதாஜி தோற்றுவித்த இந்திய தேசியப் படை வீரர்களை, இங்கு வைத்துத்தான் ஆங்கிலேயர்கள் விசாரணை செய்தார்கள் என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

1913 இல் இது முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே இந்த கோட்டையை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சுதந்திரத்திற்கு பின்னர், இந்த இடத்தின் கட்டமைப்பில் வரையறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

1947-ம் ஆண்டு இந்தக் கோட்டையில் பறந்த ஆங்கிலேயக் கொடி கீழிறக்கப்பட்டு, இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டது. சுதந்திர தினமான அன்று, இந்தியப் பிரதமர் ஜவகர் லால் நேரு இந்தியாவின் சுதந்திரக்கொடியை இந்த கோட்டையில் ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

நமது நாடு நம்முடைய கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்பதை உணர்த்துவதாகவே இந்தக் கோட்டையில் கொடி ஏற்றப்பட்டது என்று தெரிவிக்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.

சுதந்திர தினத்திற்கு செங்கோட்டையில் கொடி ஏற்றும் வழக்கமும் மேலும் அன்று பிரதமர் கொடியேற்றி சுதந்திர தின உரை ஆற்றுகின்ற வழக்கமும் 1947 ஆகஸ்ட் 15 அன்று முதல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. சுதந்திர நாளில் பிரதமரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு உரை நிகழ்த்தும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

செங்கோட்டை இந்திய தேசிய இராணுவத்தின் பிரசித்தி பெற்ற இராணுவ ஒத்திகை செய்யும் இடமானது. இன்றும் குடியரசு தினத்தின் அணிவகுப்பு முடிந்தவுடன், பாசறை திரும்பும் நிகழச்சி குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து செங்கோட்டை வரை சீர்மிகு மிடுக்காக நடைபெறுகிறது.

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு செங்கோட்டையும் உள்ளதானது. சரியாக 2000-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். அதிலிருந்து இங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கோட்டை 2003 ஆம் ஆண்டு வரையில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கு பிறகாக சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாத்துறை இந்த கோட்டையை நேர்த்தியாக பராமரித்தும் வருகிறது.

இதன் கலையம்சம், கட்டிட நேர்த்தி, புராதன கலாச்சார சிறப்பு, வரலாற்று மேன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு செங்கோட்டைக்கு 2007ம் ஆண்டு UNESCO அங்கீகாரம் அளித்தது.

இந்த கோட்டையில் ஒரேசமயத்தில், 3000க்கும் மேற்பட்ட மக்கள் கோட்டை வளாகத்தினுள் வசிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
தற்போது செங்கோட்டை வளாகத்தின் உள்ளே முகாலயர் கால அம்சங்கள் மற்றும் வரலாற்றை விளக்கும் திரைக்காட்சிகள் தினமும் மாலை நேரத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக திரையிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய போர் ஞாபகார்த்த அருங்காட்சியகம் ஆகியவையும் இந்த வளாகத்தில் தான் இயங்குகின்றன.

திங்கள்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வரலாற்று பாரம்பரிய சின்னம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. கோட்டைக்குள் சுற்றுலா வழிகாட்டிகள், சிறிய உணவகம், கழிவறைகள், சக்கரநாற்காலிகள் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் போன்றவை பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை இன்றளவு இந்தியாவின் புராதன கலாச்சார சின்னமாகவும், கட்டிடக் கலையின் சிறப்பை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவும் உள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் நாட்டு மக்களுக்கான சிறப்பு திட்டங்களை அற்பணித்து சுதந்திர தின உரையாற்றுவது ஒரு பாரம்பரியமாக தொடர்கிறது.

Advertisement