பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்து என்ன…!

511

இடைக்கால பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் :-

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்:- விவசாயிகள், நடுத்தர மக்களுக்கான சலுகைகள், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது, தேர்தல் பட்ஜெட்.

மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி:- தேர்தல் தேதி அறிவித்த பிறகு, பட்ஜெட் திட்டங்களை எடுத்துக்கொள்ள முடியாது. இதையெல்லாம் புதிதாக வரும் அரசு அமல்படுத்துமா? கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஏன் எதுவும் அறிவிக்கவில்லை?

அகிலேஷ் யாதவ் :- பொய் மூட்டையாக பட்ஜெட் உள்ளது. உண்மையை தவிர எல்லாமே இருக்கிறது. பா.ஜனதாவிடம் இருந்து விடுபட விரும்பும் மக்கள், இந்த சலுகைகளால் மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

பா.ஜனதா தலைவர் அமித் ஷா:- சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பலன் அளிக்கக்கூடியது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது.

மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக்:- சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘புதிய இந்தியா‘ கனவை எட்ட உதவும்.

எடியூரப்பா :- வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். 12 கோடி பேர் பலன் அடைவார்கள். இந்த பட்ஜெட்டை மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் கொண்டாட வேண்டும்.

மல்லிகார்ஜூன கார்கே :- தேர்தல் அறிக்கை போல் உள்ளது. தேர்தலுக்காகவே எல்லாவற்றையும் அறிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். மே மாதம்வரையே மோடி அரசு இருக்கும் என்பதால், இவற்றை அமல்படுத்த முடியாது.

சசிதரூர் :- வருமான வரி உச்சவரம்பு மட்டுமே நல்ல விஷயம். விவசாயிகளுக்கு மாதம் ரூ.500 வழங்குவது, கவுரவமாக வாழ போதுமானது அல்ல.

சித்தராமையா:- வேதனையில் உள்ள விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் உடனடி நிவாரணம் எதுவும் இல்லை. எல்லாமே தேர்தல் வாக்குறுதிகளாக உள்ளன. முந்தைய வாக்குறுதிகளால் ஏமாந்த மக்கள், மோடி அரசை நம்ப மாட்டார்கள்.

கே.டி.ராமாராவ்:- தெலுங்கானா அரசு அமல்படுத்தி வரும் ‘ரைத்து பந்து‘ என்ற திட்டத்தை காப்பியடித்து, விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க உள்ளனர். இதை முந்தைய பட்ஜெட்டுகளிலேயே அறிவித்து இருந்தால், விவசாயிகள் பலன் அடைந்திருப்பார்கள். நல்ல அறிவிப்புகள் இருந்தாலும், அரசியல் கோணத்திலும் மக்கள் பார்ப்பார்கள்.

கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி:- அதிகாரிகள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டா? அல்லது, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தலைமையகத்தில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டா என்று தெரியவில்லை. பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தலை நோக்கமாக கொண்டது.

மாயாவதி:- பா.ஜனதாவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளுக்கு நிகராக பட்ஜெட் உள்ளது. ஏழைகளுக்கான சலுகை திட்டங்களின் பலன்கள், பணக்காரர்களையே சென்றடைந்து வருகிறது.

பீகார் முதல்மந்திரி நிதிஷ் குமார்:- விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குதல், வருமான வரி உச்சவரம்பு உயர்வு ஆகியவை வரவேற்கத்தக்க நடவடிக்கைகள். இது, நேர்மறையான பட்ஜெட்.

டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்:- இந்த பட்ஜெட், மோடி அரசின் கடைசி வித்தை. இதிலும், டெல்லிக்கு ஏமாற்றம்தான். மத்திய அரசின் வரி வருவாயில் டெல்லியின் பங்காக ரூ.325 கோடி மட்டுமே மத்திய அரசு அளிக்கிறது. அதனால், டெல்லி நலிந்த நிலையில் இருக்கிறது.

Advertisement