சர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..? சிறப்புத் தொகுப்பு..!

1438

மனித இனத்திற்கும், காடுகளின் வளத்துக்கும் இன்றியமையாததாக விளங்குவது யானைகள். சர்வதேச யானைகள் தினமான இன்று யானைகள் சந்திக்கும் அவலநிலை, உலக மக்களுக்கும், காடுகளின் வளர்ச்சிக்கும் யானைகளின் பயன்பாடு என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு….

இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4,800க்கும் அதிகமாக யானைகள் வாழ்கின்றன.

உணவு, தண்ணீர், சீதோஷ்ண நிலை, வளர்ப்பு, பிரச்சனைக்குரிய சூழல் போன்ற காரணங்களுக்காக யானைகள் 50 கிலோ மீட்டர் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இடம் பெயரும் தன்மை கொண்டவை.

குறிப்பாக தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப்பெயர்ச்சி இருக்கும். யானைகள், தங்களுடைய எடையில் 5 சதவீத அளவுக்கு உணவு உட்கொள்கின்றன.

தினமும் 200லிருந்து 250 கிலோ இலை, தழைகளையும், 150லிருந்து 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்ளும். உயிரினங்களிலேயே யானை மற்றும் டால்பினுக்கு மட்டும் தான், மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி அமைந்துள்ளது.

இதனால், கோபம், பாசம், கண்ணீர் என பல விஷயங்களில் யானைகள், மனிதரை ஒத்திருக்கும். ஒரு யானை இருந்தால் ஒரு வனத்தையும் உருவாக்கலாம் என கூறுவார்கள்.

அதற்கு காரணம் யானையின் சானமும், அவற்றின் அறிவுத்திறமையும் தான். யானையின் கால்கள், தூண் வடிவில் எந்த மாதிரியான இடத்திலும் நடக்கும் தன்மை கொண்டவை.

இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள், துண்டாடப்படுகின்றன.

இதனால், யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் கொல்லப்படும் யானைகளில், 59 சதவீதம் வேட்டையாடப்பட்டவை.

விஷ உணவால் 13 சதவீதமும், நோயினால்10 சதவீதமும், மின்சாரம் தாக்கி 8 சதவீதமும், ரயிலில் அடிபட்டு 5 சதவீதமும், பிற காரணங்களால் 5 சதவீதமும் யானைகள் உயிரிழக்கின்றன.

யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் என்பதே நிதர்சனம். பல்வேறு சிறப்பு கொண்ட யானைகளை அதன் பாணியிலேயே வாழ விடுவது தான் வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement