சிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்

405

ஈரான் சிறைபிடித்துள்ள பிரிட்டன் கப்பலில் சிக்கி தவிக்கும் 18 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் பிரிட்டன் நாட்டு கடற்படை பறிமுதல் செய்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த பிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள 18 இந்தியர்களை மீட்க, ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.