செயற்கை மழைத் திட்டத்திற்கு வாய்ப்புள்ளதா? உயர்நீதிமன்றம்

310

தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க செயற்கை மழையை ஏற்படுத்தும் திட்டம் ஏதும் உள்ளதா? என மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது குறித்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 16 -ஆம் தேதி பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என்ஐடிஐ- என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில் 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தண்ணீரைச் சேமிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சேமிப்பு குறித்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என். கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் பருவ மழை குறைந்து தண்ணீர்த் தேவை அதிகரித்துள்ளது.

தற்போது, செயற்கை மழையை நாடும் நிலை உள்ளது. ஆகவே செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of