அரசியல் சுயநலத்திற்காக தாக்குதல் நாடகமா? – விளாசும் மம்தா பேனர்ஜி

201

போர் என்பது நாட்டின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டுமே ஒழிய, சிலரின் அரசியல் இலாபத்திற்காக இருக்கக்கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்தியதாக சொல்லப்படும் தாக்குதல்கள் குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ‘நாம் இந்திய நாட்டின் வீரர்களின் பக்கம் நிற்கிறோம். அவர்களே நமது பெருமை! போர் என்று வந்தால், அது நாட்டின் பாதுகாப்பிற்கானதாய் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிலரின் தேர்தல் வெற்றிக்காக இருத்தல் கூடாது.

நமது விமானப்படை நடத்திய தாக்குதலில், மொத்தம் 300 முதல் 350 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக நமது தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சர்வதேச ஊடகங்களோ, அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்கின்றன. எனவே, எது உண்மை? என்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும். அரசியல் சுயநலத்திற்காக தாக்குதல் நாடகம் நடத்துவதை ஒருபொழுதும் ஏற்கமுடியாது.

ஆனால், நமது பிரதமரோ, இதைப் பற்றியெல்லாம் கவலைக் கொண்டது போல் தெரியவில்லை. இதுவரை, அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்படவில்லை. சிலரின் சுயநலனுக்காக நமது வீரர்களின் ரத்தம் சிந்தப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்றார்.