வருமானவரித்துறை சோதனையால் எங்களுக்கு அனுதாப ஓட்டு கிடைக்கும் – துரைமுருகன்

593

வருமான வரித்துறை சோதனையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுகவுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்றும் துரைமுருகன் கூறினார்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு, அவரது கல்லூரி மற்றும் தி.மு.க. பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது தி.மு.க. பிரமுகர் சிமெண்டு குடோனில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.11½ கோடி பணம் சிக்கியது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக துரைமுருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வருமான வரித்துறையினர் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். தி.மு.க. கட்சிக்காரர் வீட்டில் சிக்கிய பணத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இந்த சோதனை மூலம் எனது மகனுக்கும், மற்ற தி.மு.க. வேட்பாளர்களுக்கும் நல்லது நடந்து உள்ளது. இந்த விவகாரம் கட்சி தொண்டர்களை இன்னும் கடுமையாக பணியாற்ற காட்டி விட்டுள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சியினருக்கு பாடம் புகட்டப்படும்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களை குறிவைத்து சோதனை நடத்துவது என்பது இதற்கு முன்பு எப்போதுமே நடக்காதது என்று இது அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானது.

ஆளுங்கட்சி சட்ட அமைப்புகளை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பயன்படுத்தும் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதன்மூலம் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள், துன்புறுத்துகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை ஒரு காலத்திலும் நடந்தது கிடையாது. நரேந்திரமோடி- எடப்பாடி பழனிசாமி அரசுகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.

சில எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக இப்படி செய்கிறார்கள். இதன்மூலம் எங்கள் வெற்றிகளை தடுத்து விட முடியாது.

எதிர்க்கட்சியினரை குறிவைத்து சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர் இதே சோதனையை அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களிடம் நடத்தவில்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இந்த விளையாட்டு நடக்கிறது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த சோதனை மக்கள் மத்தியில் எங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஓட்டாக மாறும். எங்கள் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.

தமிழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இப்போது இல்லை. தி.மு.க. தனது தலைவர் கருணாநிதியை இழந்தாலும் அந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார். அவர் சிறப்பாக செயல்படுகிறார். தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரசாரம் செய்கிறார்.

ஆனால் அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் இல்லை. கட்சியில் பணியாற்ற தொண்டர்கள் இல்லை. இதுதேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.

நடக்கும் 18 சட்டசபை இடைத்தேர்தலில் 15-ல் இருந்து 16 இடங்களை தி.மு.க. கைப்பற்றும். எடப்பாடி பழனிசாமி அரசு கவிழும்.

மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவை சாதாரண மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. அவர்கள் மோடி அரசை தூக்கி எறிவதற்கு தயாராகி விட்டார்கள். அதேபோல் தமிழக அரசும் எல்லா வகையிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. எனவே மக்கள் இந்த அரசுக்கு எதிராக உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of