இது மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு ?

356

தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மத்திய சென்னை தொகுதியில் பிரசாரம் செய்தார். அவர் மண்ணடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது.

வரும் 25-ந்தேதி அன்று நமது கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் வழங்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர இருக்கின்ற காரணத்தினால் 26-ந்தேதிக்கு பிறகுதான் கழக வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்கின்ற சூழ்நிலை உள்ளது.

இன்றைக்கு தொலைக்காட்சிகளில் பார்த்தால் ஒரு மெகா கூட்டணி பற்றி சொல்கிறார்கள். இன்னொன்று பயில்வான் கூட்டணி பற்றி சொல்கிறார்கள், கூட்டணி என்றால் இன்றைக்கு நாம் அமைத்திருக்கிறோமே இயற்கையாக எந்த ஒரு பேரமும் இல்லாமல் பாசத்துடன் அரசியலையும் தாண்டி, தமிழ்நாடு மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டிருக்கின்ற கூட்டணி.

இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் கூட்டணி அமைத்தவர்களின் வெற்றி தோல்வி என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரிய வரும். ஆனால் இந்த கூட்டணி அமைந்தவுடன் தேர்தல் முடிவுக்கு முன்பாகவே இது தோல்வி பெற்று விட்டது என்று தமிழக மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

18 தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பழனிசாமி அணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். 8 தொகுதியில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனில் இந்த ஆட்சி தானாக முடிவுக்கு வரும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

எனவேதான் சொல்கிறேன், தமிழக மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற நல்லதொரு வாய்ப்பாக, இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது.

தமிழகத்தை வஞ்சிக்கின்ற மோடியை ஒரு வழி செய்திட, மோடியை வீட்டுக்கு அனுப்ப தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டம் என்றாலும் சரி, கடுமையான புயல் தாக்கினாலும் சரி, தூத்துக்குடியில் 14 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தாலும் சரி அதை கண்டு கொள்ளாத மோடி, தேர்தல் என்று வந்தவுடன் 4 வாரங்களுக்குள் 4 முறை வந்து சென்றுவிட்டார்.

இன்னும் எத்தனை முறை வந்து செல்வார் என்று எண்ணிப்பாருங்கள். தேர்தலுக்காக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்று மத்தியில் ஆட்சி செய்யும் மோடி வருகிறார். அதனால்தான் அன்றைக்கு அம்மா மோடியா, லேடியா நிர்வாகத்தில் சிறந்தவர் என்று கேள்வி எழுப்பினார்.

மோடி சொன்ன எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ யாரை நம்பி வாக்களித்தால் தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதை தமிழக மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

கணக்கு பாடத்தில் வேண்டுமென்றால் 7, 3-ம் கூட்டினால் 10 என்று வரும். தேர்தல் களத்தில் கூட்டணி அமைப்பதால் வெற்றி என்பது 7, 3-ம் கூட்டினால் பூஜ்ஜியம் என்று வரும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஆர்.கே. நகர் தொகுதி முடிவு அமைந்தது.

இந்த துரோகிகளிடம் சேருவதைவிட கடலில் குதிக்கலாம். இவர்கள் எங்களுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கே துரோகம் செய்தவர்கள். இவர்களுடன் என்றைக்கும் சேர வாய்ப்பில்லை.

அங்கு எஞ்சியுள்ளவர்கள் இந்த தேர்தல் முடிந்தவுடன் எங்களுடன் வந்து சேருவார்கள் என்பதுதான் உண்மை. 33 ஆண்டுகள் அம்மாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். என்றைக்கும் எவரிடமும், யாரிடமும் சமரசம் என்ற வார்த்தைக்கு எங்கள் அகராதியில் இடமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of