ஐயுசி கட்டண விவகாரத்தில் அதிரடி திருப்பம்… – ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்த பிராட்பேண்ட் இந்தியா மன்றம்..!

369

செல்போன் அழைப்புக்கான ஐயுசி கட்டணத்தை ரத்து செய்வதற்கான இறுதித் தேதியில் டிராய் மாற்றம் செய்தால், அது கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு முறையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்றும் அது ஏழை நுகர்வோர்களை பாதிக்கும் என்றும் ஜியோ நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில் ஜியோவின் கருத்துக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் எந்த ஒரு தொலைத் தொடா்பு நிறுவனத்தின் வாடிக்கையாளா்களும் பிற நிறுவனங்களின் எண்களைத் தொடா்புகொண்டு பேசும்போது, அந்த அழைப்பை ஏற்பதற்கான சிறு கட்டணத்தை அந்த நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.

இதற்கு பெயர் நிறுவனங்களிடையிலான இணைப்புக் கட்டணம் (ஐயுசி) என்றழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு அழைப்புக்கும் 6 பைசா என கட்டணத்தை டிராய் நிர்ணயித்துள்ளது. எனினும் அந்தக் கட்டண முறையை, 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவுக்குக் கொண்டு வருவதாக டிராய் அறிவித்து இருந்தது.

இந்த சூழலில் சில ஆண்டுக்கு முன்பு தொலைத் தொடா்பு சந்தையில் அதிரடியாக நுழைந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என அளவில்லா இலவச அழைப்பை வழங்கியது.

அத்துடன் மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலைபேசி எண்களுக்கு ஜியோ வாடிக்கையாளர்கள்அழைத்து பேசும் போது நிமிடத்திற்கு 6 பைசா என்ற ஐசியு கட்டணத்தை அந்த நிறுவனங்களுக்கு அளித்தது.

ரிலையன்ஸ் ஜியோ ஐயுசி கட்டணமாக ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.13,500 கோடி செலுத்தியுள்ளது,.

இந்நிலையில் பிற நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு ‘மிஸ்டு கால்’ மட்டுமே தந்து பேசுவதால், அந்த நிறுவனங்களிடமிருந்து ஐயுசி கட்டணங்கள் வசூலாவதில்லை என்று ஜியோ கூறியது.

இந்த நிலையில், ஐயுசி கட்டணத்தை ரத்து செய்வதற்கான அடுத்த ஆண்டு ஜனவரி மாத காலக் கெடுவை நீட்டிக்க டிராய் முடிவு செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜியோ, டிராயின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,

பிற நிறுவன தொலைபேசி எண்களின் அழைப்புக்காக செலுத்தும் 6 பைசாவை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிப்பதாக அறிவித்து தற்போது வசூலித்து வருகிறது.

எனினும் ஐயுசி கட்டணம் குறித்து டிராய் அமைப்புக்கு ஜியோ கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ஐயுசி கட்டணத்தை ரத்து செய்வதற்கான இறுதித் தேதியில் மாற்றம் செய்தால், அது இலவச அழைப்பு முறையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.

மேலும், செல்போன் அழைப்புக் கட்டணங்கள் உயா்வதற்கும் அது வழிவகுக்கும். டிராய் அமைப்பின் இந்த முடிவு, தேவையில்லாததும், ஏழை வாடிக்கையாளா்களுக்கு எதிரானது.

இந்த முடிவு பழைய தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது.. அந்த நிறுவனங்கள் தங்களது 2ஜி வாடிக்கையாளா்கள் தொழில்நுட்ப வளா்ச்சியின் பலனை தருவதில்லை. அந்த நிறுவனங்கள், தங்களது சேவைகளுக்காக வாடிக்கையாளா்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஆனால், அதே சேவைகளை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம். இவ்வாறு வாடிக்கையாளா்களுக்கு எதிராகவும், மின்னணு தொழில்நுட்பப் புரட்சிக்கு எதிராகவும் செயல்படும் தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக டிராய் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு, பிரதமா் நரேந்திர மோடியின் ‘மின்னணு இந்தியா’ கனவுக்கு எதிரானது என கூறியிருந்தது.

இந்நிலையில் ஜியோவின் கருத்துக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்போன் அழைப்புக்கான ஐயுசி கட்டணத்தை ரத்து செய்வதற்கான இறுதித் தேதியை மாற்றம் செய்யக்கூடாது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திட்டமிட்டபடி, ஜனவரி 1, 2020 முதல் அமல்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் எந்தவொரு ஒரு பிற்போக்கு நடவடிக்கையும் நுகர்வோர் மற்றும் தேசத்தின் நலன்களுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் “என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

40 கோடிக்கும் அதிகமான மொபைல் பயனர்கள் தொடர்ந்து 2 ஜி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் நிலையில், டிராய் ஐசியு கட்டணத்தை 2020 ஜனவரி முதல் ரத்து செய்தால் அது ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்களை பாதிக்கும்.

ரத்து செய்யாவிட்டால் ஜியோவை பாதிக்கும். இந்த சூழலில் ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் டிராய் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of