வேலை நிறுத்தப்போராட்டத்தை ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்

213

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு தடைக்கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜாக்டோ-ஜியோவினரின் கோரிக்கை தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதுவரை போராட்டத்தை ஒத்தி வைக்க முடியுமா என்றும் ஜாக்டோ- ஜியோவினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, நீதிபதிகளின் யோசனையை ஏற்று  போராட்டத்தை டிசம்பர் 10ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளனர்.