பாலமேட்டில் களைகட்டும் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்… 900 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு..!

637

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.

அவற்றில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தை 1,2,3 தேதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.

இந்நிலையில், அவனியாபுரத்தில் தை 1-ம் நாளான நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் அமைச்சர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவதாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


இன்றைய ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தம் 700 காளைகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டியில் 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் 75 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு முறை களமிறக்கப்படும் வீரர்களைத் தனியாகக் கண்டறிய பிரத்யேக டி ஷர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டில் இன்று காலை தொடங்கியதிலிருந்து இதுவரை மூவர் காயமடைந்துள்ளனர். இருவர் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.