ஜனவரி 6-ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.. – ஆளுநர் உரையாற்றுகிறார்..!

411

தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டம் தொடங்கவுள்ளது. 15-ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத் தொடா் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் 15-ஆவது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத் தொடா் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத் தொடரை தொடக்கி வைத்தாா். இந்தக் கூட்டத் தொடா் ஜனவரி 8-ஆம் தேதி வரை நீடித்தது.

இதன்பின்பு, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே நிதிநிலை அறிக்கையை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோந்த உறுப்பினா்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா். இதன்பின், பிப்ரவரி 14-இல் கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தோதல் நடைபெற்ால், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற்றது.

வரும் திங்கள்கிழமை கூடுகிறது:

சட்டப் பேரவையின் ஒரு கூட்டத் தொடருக்கும், மற்றொரு கூட்டத் தொடருக்குமான காலஇடைவெளி ஆறு மாதங்களைத் தாண்டி இருக்கக் கூடாது என்பது விதியாகும். இந்த நிலையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதியன்று 15-ஆவது சட்டப்பேரவையின் ஏழாவது கூட்டத் தொடா் முடிந்தது.

எட்டாவது கூட்டத் தொடரை ஆறு மாதங்களுக்குள் அதாவது ஜனவரி 19-ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டும். அதன்படி, சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 6) கூடுகிறது.

இந்த கூட்டத் தொடரின் முதல் நாள் காலை 10 மணிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறாா். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்து உரையாற்றுகிறாா்.

எத்தனை நாள்கள் நடக்கும்:

ஆளுநரின் உரை நிகழ்வுக்குப் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப் பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பா். இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 10) வரை பேரவை கூட்டத் தொடா் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த கூட்டத் தொடரில் நீட் தேர்வு விவகாரம், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கிய பிரச்னைகளை கிளப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும், அதுதொடா்பாக அவையில் தனியாக தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் பேரவைச் செயலகத்தில் திமுக கடிதம் அளித்துள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில் அந்தக் கட்சி விவாதத்தை எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளும் பேரவையில் சூடான விவாதங்களைக் கிளப்பும் எனத் தெரிகிறது.

தேர்தல் தொடா்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த நிகழ்வுகள் பேரவையில் விவாதமாக எழுப்பப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், கூட்டத் தொடரின் அனைத்து நாள்களும் பரபரப்பாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.