தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, இயற்கை பொருட்களை தயாரிப்பவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் சிறப்பு நோக்கு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வரும் ஜனவரி மாதம் முதல், சிறு குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியில் சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்டவைகளுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் கிடைப்பதாக குறிப்பிட்ட அவர், அவற்றை தயாரிப்பவர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கும் என்று கூறினார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்து வந்த சிறு நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை அணுகினால் அவர்களுக்கான மாற்று உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.