ஓ.பி.எஸ் உட்பட 10 பேருடன் இணைவது தற்கொலைக்கு சமம்: டிடிவி தினகரன்

806

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்திக்க தூது விடுத்தது தொடர்பாக விளக்கம் அளித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள் என்றும், திகார் சிறையில் இருந்து விடுதலையான தன்னை 2017- ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அப்போது, தர்மயுத்தம் என கூறி தான்நடந்து கொண்ட செயலுக்காக தம்மிடம் மன்னிப்பு கோரினார் எனவும் குறிப்பிட்டார்.

பழனிசாமியுடன் இணைந்தது தவறு என்றும், முதலமைச்சர் பழனிசாமியை பதவியில் இருந்து இறக்க தயாராக இருப்பதாகவும், தனக்கு உயர் பதவி தர தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாகவும் தெரிவித்தார். கடந்த மாதமும் அவர் என்னை சந்திக்க நேரம் கேட்டதாகவும், தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துக் கொண்டே தன்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார் என்றும் தினகரன் குற்றம் சாட்டினார். ஓபிஎஸ் உள்ளிட்ட 10 பேருடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்ற டிடிவி தினரகன், ஓ.பி.எஸ்-ஈபிஸ்சுடன் இணைவது தற்கொலைக்கு சமம் எனக் கூறினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்நாள், முந்நாள் கதாநாயகர்களிடையே நடைபெறும் மறைமுக யுத்தம் தற்போது கடைவீதிக்கு வந்துவிட்டது. நீயா, நானா என்ற வகையில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுகின்றன. இன்றைய காட்சியில் நடந்த அரசியல் நகர்வுகளை,இனி ஜெயலலிதா இறந்த பிறகு, அஇஅதிமுக-வில் நடைபெறும் உட் கட்சிப் பிரச்சினை என்பது மீன் மார்க்கெட் சண்டையை விஞ்சும் அளவுக்குச் சென்றுக் கொண்டிருக்கிறது. மெரினாவில் தொடங்கிய தர்மயுத்தம், கூவத்தூரில் மர்மநாடகமாகி பிறகு, பிரிந்தவர்கள் இணைந்தார்கள்….ஆனால், ஏற்பாடு செய்தவர்கள் தனித்தீவானார்கள்…

சசிகலா, டிடிவி தினகரன் தனித்தீவாகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அமைத்தார்கள். ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் ஒன்றாகி, அதிமுகவின் ஆட்சியிலும் கட்சியிலும் பொறுப்புகளை பிரித்துக் கொண்டனர். ஆனால், இந்த இணைப்பு குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள்… குறிப்பாக, ஈபிஎஸ் கெட்டிக்காரர்… தேவையானதை பெற்றுக் கொண்டார். ஓபிஎஸ் ஏமாந்துவிட்டார். அவருக்குக் கிடைத்த வாய்ப்பு, அவரோடு துணையாக நின்றவர்களுக்கு கிடைக்கவில்லை என தொடர்ந்து விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழும். எழுந்த வேகத்திலேயே கடலலையாய் மீண்டும் மறைந்துவிடும்.

தற்போது மறைமுகமாக, ஓபிஎஸ் தரப்பும், தினகரனும் தரப்பும், ஈபிஎஸ்-க்கு எதிராக திரைமறைவில் பேசியதாக, இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர். கடந்த ஆண்டு தம்மை ஓபிஎஸ் சந்தித்தார் என்றும் கடந்த வாரம் கூட தம்மை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார் என்றும் டிடிவி தினகரன் வெளிப்படையாக குற்றம்சாட்டியதோடு மட்டுமில்லாமல், இனிமேல் அவர்களுடன் இணைவது தற்கொலைக்கு சமமானது என்றும் பரபரப்பாக தெரிவித்தார்.

நாங்கள் ஒன்றும் தினகரைச் சந்திக்கவில்லை… அவர்தான் எங்களுடன் சமரசம் செய்ய ரகசிய தூதர்களை அனுப்பினார் என்று அமைச்சர் தங்கமணி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

எது எப்படியோ, இரு தரப்பும் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசினாலும், முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஈபிஎஸ் இதுவரை, எந்த நகர்வையும் செயல்படுத்தாமல் அமைதியாக இருக்கிறார்… எது எப்படியோ, தலைகள் மோதிக் கொள்வதால், அஇஅதிமுக தொண்டர்கள் தான் ஒன்றுமே புரியாமல், யாருக்கு யார்….. வேட்டு வைக்கிறார்கள் என்ற குழப்பத்தில் தொடர்ந்து காணப்படுகின்றனர்.

Advertisement