லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி ‘தேவதாஸ்’ நியமனம்

269

உயர் அதிகாரத்தில் உள்ளவர்களையும் விசாரிக்கக்கூடிய லோக் ஆயுக்தா என்ற அமைப்பை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று லோக் பால் சட்டம் மூலம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த வருடம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்த அறிவிப்பை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 25-ந்தேதியன்று தமிழக அரசு கடிதம் எழுதியது.

அதைத் தொடர்ந்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவின் மூலம் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று கடந்த 1 ஆம் தேதியன்று அரசிதழை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகத்தில் அமைக்கப்படும் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி பி.தேவதாஸ் இருப்பார். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிப்பிரிவு உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம், வக்கீல் கே.ஆறுமுகம் ஆகியோர் அதன் நீதிப்பிரிவு அல்லாத உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது அவர்கள் 70 வயதை அடையும் நாள் வரையில், இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை நீடிக்கும்.

இந்த நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக நீதிபதி தேவதாஸ் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். நீதித்துறை உறுப்பினர்களான கிருஷ்ணமூர்த்தி, ஜெயபாலன் ஆகியோரும் நியமன ஆணைகளை பெற்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of