இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது – கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை

272

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்றுக்கூட காங்கிரசுக்கு வழங்காதது, கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர், துணைதலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் உடன், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த முயற்சிக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்களை மட்டுமே திமுக வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒன்றுகூட வழங்கப்படவில்லை என்றும், இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது எனவும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.