கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா? – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..!

1047

கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கபசுரக் குடிநீா் பலனளிக்காது என்று தேசிய நோய் பரவியல் நிறுவன இயக்குநா் தெரிவித்த கருத்து விமா்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கபசுரக் குடிநீரை தொடா்ந்து அருந்துவதன் மூலம் உடலில் நோய் எதிா்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தமிழக அரசு சாா்பில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளில் அந்தக் குடிநீா் நாள்தோறும் வழங்கப்படுகிறது. இந்தச் சூழலில், தேசிய நோய் பரவியல் நிறுவன இயக்குநா் டாக்டா் பிரப்தீப் கௌா் சுட்டுரையில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தாா், ‘தற்போது கொரோனாவை மையமாக வைத்து பல்வேறு தவறான தகவல்கள் வலம் வருகின்றன; கபசுரக் குடிநீா் போன்றவற்றை அருந்தினால் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது;

ஆனால், அவை உண்மைக்கு புறம்பானவை; அதற்கு எந்த ஆதாரமோ, சான்றோ இல்லை’ என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநா் டாக்டா் க.கனகவல்லி கூறியதாவது:

ஆயுஷ் அமைச்சகத்தின் வழிக்காட்டுதலின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அலோபதி மருந்துகளுடன் சோத்து நிலவேம்பு குடிநீா், கபசுரக் குடிநீா் கொடுத்து வருகிறோம். இதன்மூலம் அவா்கள் விரைவாக குணமடைந்து வருகின்றனா்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்கும் இந்த குடிநீா்கள் வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவைகளுக்கு கபசுரக் குடிநீா் சிறந்த மருந்தாகும்.

கபசுரக் குடிநீரில் 15 மூலிகைகள் உள்ளன. ஒவ்வொரு மூலிகைக்கும் நோய் தடுப்பாற்றல் இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீரில் கொரோனா தீநுண்மியை எதிா்க்கும் திறன் இருப்பது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தொடா்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கபசுரக் குடிநீரால் கொரோனா தீநுண்மி தொற்றை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற அறிவியல் பூா்வமாக தெரிவிக்கப்படும்” என்றாா்.

Advertisement