ஆழ்துளை கிணறுகள்.. தொடரும் மரணங்கள்.. – அவசர வழக்கு தொடர்ந்த கலாமின் உதவியாளர்..!

448

ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக்கோரி மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் கலாமின் உதவியாளர் பொன் ராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு காலை 11 மணிக்குமேல் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

ஆழ்துளைக் கிணறு குழிக்குள் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல், அதைத்தொடர்ந்து பொதுநலவழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற அளித்த வழிகாட்டுதல் காரணமாகத் தமிழக அரசு பஞ்சாயத்துச் சட்டம் இயற்றியது.

ஆனாலும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடாதது குறித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் பல உயிரிழப்புகள் நேர்ந்தது.

கடைசியாகக் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் சுஜித் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 82 மணி நேர மீட்புப்பணியின் முயற்சி கைகூடாமல் பிணமாக மீட்கப்பட்டார். சிறுவன் இழப்பு ஆழ்துளைக் கிணறு குறித்த சட்டத்தைக் கடுமையாக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை வலுவாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன் ராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

அவரது கோரிக்கை மனுவில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும், உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கிய அடிப்படையில் தமிழக அரசின் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடவேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விடுமுறை காரணமாக நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று முற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of