“களவாணி-2′ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

540

நடிகர் விமல் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள “களவாணி-2′ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள “களவாணி-2′ திரைப்படம் வரும் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தடை விதிக்க கோரி ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “களவாணி-2′ படத்தின் விநியோக உரிமையை மெரீனா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றிருந்தோம். ஆனால், தற்போது இந்தத் திரைப்படத்தை வர்மான்ஸ் புரொடக்சன் நிறுவனம் சார்பில் திரையிடப்பட உள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

எனவே, “களவாணி-2′ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் “களவாணி-2′ படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி வர்மான்ஸ் புரொடக்சன் சார்பில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏ.சற்குணம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “களவாணி’ படத்தை நான் இயக்கினேன். அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து அதே நடிகர், நடிகைகளைக் கொண்டு “களவாணி-2′ திரைப்படத்தை தற்போது தயாரித்து இயக்கி உள்ளேன். இந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கும் இந்தத் திரைப்படத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தில் தவறான தகவலைக் கூறி தடை உத்தரவு பெற்றுள்ளனர். எனவே “களவாணி-2′ படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வர்மான்ஸ் புரொடக்சன் சார்பில் வழக்குரைஞர் ஆர்.சுதா ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “களவாணி-2′ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of