கமல் தத்தெடுத்த கிராமத்தில் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு

2077

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தங்கால் கிராமத்தை தத்தெடுத்ததால் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவதாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அருகே அதிகத்தூர் பகுதியை நடிகர் கமல்ஹாசன் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாக தத்தெடுத்தார். இந்த கிராமத்தை சிறப்பாக வைத்து அதனை ஒரு முன்மாதிரியாக கொண்டு தமிழகம் முழுவதும் மாற்றத்தை கொண்டு வருவேன் என அவர் கூறினார்.

ஆனால், நிலையோ தலைகீழ். கமல்ஹாசனுக்கு அரசாங்கமே பரவாயில்லை என்று கூறுகின்றனர் பொதுமக்கள். இதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்று அதிகத்தூரில் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அங்குள்ள இந்திரா நகர் பகுதிக்கு கடந்த ஆறு மாத காலங்களாக குடிதண்ணீர் சரிவர வராததாலும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாலும் அப்பகுதியில் பாம்புகள், பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து விடுவதாகவும் மக்கள் புழம்புகின்றனர்.

மேலும் குடிதண்ணீர் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படுவதாகவும் கேன் தண்ணீர் மட்டுமே பணத்திற்கு வாங்கி பயன்படுத்தி வருவதால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள்,

பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தங்கள் கிராமத்தை மக்கள் நீதி மையம் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் தத்தெடுத்த காரணத்திற்காக தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மேற்குறிப்பிட்டு பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் காவல்துறையினர் பெண்களிடம் பேசி குடி தண்ணீர் மின்சாரம் ஆகியவற்றை முறையாக வழங்க அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Advertisement