மம்தாவை சந்தித்த பின் அதிரடி முடிவெடுத்த கமல்

468

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொல்கத்தாவில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

தனது குறுகியகால அரசியல் பயணத்தில் மூன்றாவது முறையாக மம்தாவை சந்தித்த கமல், நாட்டுநடப்பு உள்பட பல்வேறு அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ’இன்றைய ஆலோசனை மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்தமான் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவு மேலும் பலப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

அந்தமானில் போட்டியிடும் எங்கள் கூட்டணி வேட்பாளருக்காக நான் அங்கு சென்று பிரசாரம் செய்வேன்’ என்று குறிப்பிட்டார்.

அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த பிஷ்னு படா ராய் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.