சிநேகாவுக்கு கமல் பாராட்டு!!

713

ஜாதி, மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற திருப்பத்தூர் பெண் சினேகாவுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பாராட்டும், அழைப்பும் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பார்திப ராஜா. இவருடைய மனைவி சினேகா(21). இவர்களது குடும்பத்தினர் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். இந்நிலையில், சினேகா எந்த சாதி, மதம் அற்றவர் என்று திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி சான்றிதழ் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சினேகா பெற்றார்.

இது குறித்து சினேகா கூறுகையில், ‘என்னை பள்ளியில் சேர்க்கும் போதே என்னுடைய பெற்றோர்கள் எனக்கு எந்த ஜாதியும் இல்லை என்று சொன்னே சேர்த்தார்கள். முதலில் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பள்ளி நிர்வாகம், தொடர் போராட்டத்துக்கு பின் சேர்த்துக் கொண்டார்கள். இதையடுத்து கல்லூரி வரையில் சாதி இல்லாமலே படித்தேன்.

எங்கள் குடும்பத்தின் மீது எந்த விதமான ஜாதி, மதச்சாயம் விழுந்த விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இதற்காகவே என்னுடைய உடன்பிறப்புகளுக்கு மும்தாஜ், ஜெனிஃபர் என்று பெயர் சூட்டப்பட்டது. என்னுடைய கணவர் பார்த்திப ராஜாவுக்கும் ஜாதி, மத அடையாளங்கள் எதுவும் கிடையாது. எனவே, ஜாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு அளித்தேன். தற்போது பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளது’. இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், ஜாதி மதமற்றவர் என்ற அரசு சான்றிதழ் பெற்ற திருப்பத்தூர் பெண் சினேகாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே!’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of