கன்னியாகுமரி யாருக்கு? – தொகுதியை தக்க வைக்குமா பாஜக? – சிறப்பு தொகுப்பு

1256

பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு முனைப்போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கடந்த தேர்தலில் தனித்து களம் கண்டு தமிழகத்தில் 39 க்கு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. ஆனால் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 17வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் இம்முறை வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து பார்ப்போம்…

2009 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் களம் கண்ட ஹெலன் டேவிட்சன் 3,20,161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது பாஜக சார்பில் களம் கண்ட தற்போதைய மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் 2,54,474 பெற்று 65,687 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

 

கன்னியாகுமரியில் 2014 மக்களவைத் தேர்தல் கணக்குப்படி, 14,30,918 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் களம் கண்ட பொன்.ராதாகிருஷ்ணன் 3,72,906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் களம் கண்ட வசந்தகுமார் 2,44,244 வாக்குகள் பெற்று 1,28,662 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 3 இலட்சத்து 72 ஆயிரத்து 906.

அதேபோன்று காங்கிரஸ் கட்சி சார்பில் தனித்து களம் கண்டவசந்தகுமார் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 44ஆயிரத்து 244.

அதிமுக சார்பில் ஜான் தங்கம் நின்று பெற்ற வாக்குகள் 1,76,239.

திமுக சார்பில் தனித்து நின்ற எப். எம். ராஜரத்தினம் பெற்ற வாக்குகள் 1,17,933,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனித்து நின்ற ஏ. வி. பெல்லார்மின் பெற்ற வாக்குகள் 35,284

இந்த வாக்குகளின் அடிப்படையில் தற்போது இருக்கும் சூழலில் கன்னியாகுமரி மக்களின் மன நிலையில் மாற்றம் அதிகம் காணப்படுகிறது.

புதிதாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் வெற்றி வாகை சூடுவது யார் என நிர்ணயம் செய்யும் இடத்தில் இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், திமுகவோடு இம்முறை காங்கிரஸ் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால் கடந்தமுறை காங்கிரஸிற்கும்.மார்க்சிஸ்ட் கட்சிக்கும் சென்ற வாக்குகளும், திமுக விற்கு சென்ற வாக்குகளும் ஒன்றிணைந்து வெற்றிக்கான வாய்ப்புகள் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகம் இருக்கிறது. குறிப்பாக இந்த முறை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் போட்டியிட வாய்ப்புள்ளது. ஒருவேளை ராகுல் காந்தி நின்றால் திமுக -காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றி எளிதாக அமையும்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் கன்னியாகுமரியில் வந்த வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.அப்போது தமிழக அரசும்,மத்திய அமைச்சரும் தங்களுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டினர்.

அதோடு அருகேவுள்ள மாவட்டமான தூத்துக்குடி ஸ்டெர்லைட்டிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகளின் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்தது. துப்பாக்கிச்சூடும் இந்த தேர்தலில் அதிகமாக பிரதிபலிக்கும் என்கிறது கள நிலவரம்.

இதனால் இம்முறை கன்னியாகுமரி தொகுதியில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

எம்.பி. பதவியை பொன்.ராதாகிருஷ்ணன் தக்கவைப்பாரா? அல்லது மற்ற கட்சிகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுமா? என்பதை மே மாதம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of