கர்நாடகாவில் சூடுபிடிக்கும் அரசியல் சூழல்

351

கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வரும் நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளதால் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது.

கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ் – காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சில எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை இழந்தது. இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏ,.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து கர்நாடக அரசியலில் பரபரப்பு தோற்றியது.

பின்னர் சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் வஜூபாய் வாலா, சபாநாயகர் ரமேஷ்குமார் மற்றும் முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆளுநர் கூறியது போல் சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை. உறுப்பினர்கள் அனைவரும் பேசி முடித்த பின்னரே, சட்டப்பேரவை விதிகளின்படி தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் தமக்கு யாரும் உத்தரவிட முடியாது என கூறினார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா 2வது முறையாக கெடு விதித்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் 2 முறை கெடு விதித்தும், தமது உத்தரவை மதிக்காமல், சபாநாயகரும், முதல்வரும் செயல்படுவதாகவும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த பரபரப்பான சூழலில், சட்டத்தின் விதிப்படியே செயல்பட முடியும் என்றும் தங்களால் சட்டவிதிகளை மீற முடியாது எனவும் சபாநாயகர் ரமேஷ்குமாரும், முதல்வர் குமாரசாமியும் கருத்து தெரிவித்துள்ளனர்.