கர்நாடகாவில் ஆளுங்கட்சியினர் வீட்டில் அதிரடி ரைடு..! – மத்திய அரசை விளாசும் குமாரசாமி

399

கர்நாடகாவில் அமைச்சர் புட்டராஜு மற்றும் பல்வேறு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் ஹெச்.டி.குமாரசாமி முதல்வராக உள்ளார். இங்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய இரு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ், மஜத தலைவர்களது இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குமாரசாமி நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். சிஆர்பிஎப் படை வீரர்களை மத்திய அரசு கர்நாடகாவிற்கு அனுப்பியுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறினார்.

அவர் கூறியதுதான் நடந்தது. இன்று காலை முதல், ஆளும் கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான, பல்வேறு இடங்களிலும் ரெய்டுகளை நடத்த ஆரம்பித்துள்ளது வருமான வரித்துறை.

சிறிய நீர் பாசனத்துறை அமைச்சர் சி.எஸ்.புட்டராஜுவின் மண்டியா இல்லம் அவரது உறவுக்காரர் இல்லங்களிலும் ரெய்டுகள் நடக்கின்றன.

மேலும், 7 பொதுப்பணித்துறை அதிகாரிகள், 17 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடந்து வருகிறது. குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாதான், மாநில பொதுப் பணித்துறை அமைச்சராகும்.

எனவே இந்த ரெய்டுகள் அனைத்துமே, பொதுப்பணித்துறை அதிகாரிகளை மையப்படுத்தி இருப்பது அரசியல் ரீதியான காய் நகர்த்தலா என்ற சந்தேகங்களை எழுப்புகிறது.

இதுபற்றி, மஜத தலைவர்களில் ஒருவரான மது பங்காரப்பா கூறுகையில், முதல்வர் குமாரசாமி இதுபற்றி ஏற்கனவே கூறிவிட்டார். மாநில உளவுத்துறை மூலமாக, இதுபோல ரெய்டு நடக்கப்போகும் தகவல் முதல்வருக்கு எப்போதோ போய்விட்டது.

ஆனால், ஏன் பாஜக தலைவர்கள் வீடுகளில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி. வருமான வரித்துறை சோதனை நடைபெறும் காலகட்டமும் சந்தேகத்திற்கிடமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வருமான வரி சோதனைகள் முழுக்க சிஆர்பிஎப் படை வீரர்கள் பாதுகாப்புடன் நடக்கிறதே தவிர கர்நாடக காவல்துறை உதவியை அதிகாரிகள் கோரவில்லை.

புட்டராஜு கூறுகையில், எனது மண்டியா வீட்டிலும், எனது உறவுக்காரரின் மைசூர் இல்லத்திலும், 3 அணிகளை சேர்ந்த ஐடி அதிகாரிகள், 8 சிஆர்பிஎப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகிறார்கள் என அமைச்சர் புட்டராஜு நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

புட்டராஜு மேலும் கூறுகையில், ரெய்டுகளை பார்த்து நான் பயப்படவில்லை. ஏனெனில் இது தேர்தல் நாடகம் என தெரியும். எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் எந்த பாஜக தலைவர் வீடு ரெய்டு செய்யப்பட்டுள்ளது என்பது மட்டுமே, என்று தெரிவித்தார்.

மண்டியா தொகுதியில்தான் குமாரசாமி மகன் நிகில் கவுடா லோக்சபா தேர்தலுக்காக முதன்முறையாக களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பொறுப்புகளை புட்டசாமி கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of