ரைடு வந்தீங்களே 10 ரூபாயாச்சும் கிடைச்சதா? – கொந்தளிக்கும் குமாரசாமி

636

வருமான வரித்துறை சோதனையில் 10 ரூபாயாவது கிடைத்ததா என்றும், பா.ஜனதா கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது எனவும் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஜனநாயகத்தை சிதைக்கும் பணியை செய்யவில்லை. என்னால் ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்று சொல்ல எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை. எனக்கு எதிராக எடியூரப்பா போட்ட வழக்குகளை கடந்த 12 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன்.

தன் மீதான வழக்குகளை எடியூரப்பா எப்படி நீக்கிக் கொண்டார் என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் அமைப்புகளை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. சட்டப்படி போராட்டம் நடத்துகிறோம்.

நான் முன்பு முதல்-மந்திரி பதவியை விட்டு செல்லும்போது, பி.எம்.டி.சி.யில் ரூ.1,000 கோடி டெபாசிட் செய்து வைத்திருந்தேன். அதன் பிறகு அந்த துறைக்கு ஆர்.அசோக் மந்திரியாக வந்த பிறகு பி.எம்.டி.சி. நிறுவனத்தையே சீரழித்துவிட்டார்.

வருமானவரி சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பணம் சிக்கியுள்ளதா?. 10 ரூபாயாவது கிடைத்ததா? எதற்காக இந்த சோதனை நடத்த வேண்டும். உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள்.

பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?. பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் ஏழைகள். பணம் இல்லாமல் கைகூப்பி கும்பிட்டுக் கொண்டு ஓட்டு கேட்கிறார்கள்.

நாங்கள் அனைத்து வகையான போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம். துமகூரு தொகுதி பிரச்சினை முடிந்தது. போட்டி வேட்பாளர் முத்தஹனுமேகவுடா தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். பா.ஜனதா, கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஆர்.அசோக் என்னென்ன செய்தனர் என்பது எனக்கு தெரியும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Advertisement