இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : ஆட்சி கவிழும் ஆபத்து..! – ஆரவாரத்தில் பாஜக..! – அல்லோலப்படும் குமாரசாமி..!

482

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர், அண்மையில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதை அடுத்து, கடந்த வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை குமாரசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தீர்மானம் மீதான விவாதம் மட்டும் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சியான பாஜகவின் நடவடிக்கை, ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றும் அவர்கள் சாடினர்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் முறையிட்டார். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பேசிக்கொண்டிருந்தபோது முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்து விட்டது போல் கடிதம் ஒன்று வெளியானதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது போலியான கடிதம் என்று முதலமைச்சர் அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நேற்று இரவு 11.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சபாநாயகர், இன்று மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக் கொள்ளுமாறு எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தீர்ப்புக்குப் பின்னரே வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஆளும் கூட்டணி கட்சிகள் கோரியுள்ளன. ஆனால் சபாநாயகர் அதனை ஏற்க மறுத்ததுடன், நெருக்கடி கொடுத்தால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

கடும் கூச்சல் குழப்பம் இடையே நேற்று நள்ளிரவு 11.45 மணிவரை நீடித்த சட்டமன்றத்தை காலை 10 மணிக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார். இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளுக்கு 99 எம்எல்ஏக்களே உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 103 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் வாக்கெடுப்பு நடைபெற்றால் குமாரசாமி அரசு கவிழும் சூழல் உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of