கருணாசின் ஜாமீன் மற்றும் காவலில் எடுக்க கோரிய மனு இன்று விசாரணை

621

கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கருணாசின் ஜாமீன் மனுவுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாசை போலீசார் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.