“ப்ளீஸ் போகாதீங்க சார்..” – காவல் ஆய்வாளர் இடமாற்றம்.. காலில் விழுந்து போராட்டம் நடத்திய மக்கள்..! – சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

819

சென்னை காசிமேடு காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியிட மாறுதலை ஏற்க வேண்டாம் என அவர்கள் ஆய்வாளரிடம் கதறினர்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர்களை பணிஇடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

அதன்படி சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக கடந்த 9 மாதங்களாக பணிபுரியும் சிதம்பரம் முருகேசன் சென்னையை அடுத்த அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

நேற்று மாலை 6 மணியுடன் அவர் காசிமேடு காவல்நிலையத்திலிருந்து சென்று விடுவார் என்று அறிந்த காசிமேடு சிங்கார வேலன் நகர் மீனவ பகுதியைச் சேர்ந்த பெண்கள், காசிமேடு சூரிய நாராயண சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசனை பணி இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிதம்பரம் முருகேசன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தினார்.

எனினும் அந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்கள், காசிமேடு காவல் நிலையத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்லாதீர்கள்,

நீங்கள் வந்த பிறகுதான் இங்கே குற்றச் செயல்கள் குறைந்திருக்கிறது என நன்றிப் பெருக்கோடு வேண்டுகோள் விடுத்தனர். சிலர் அவரது காலில் விழுந்து கதறி அழுதபடி வேண்டுகோள் விடுத்தது பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.

சிதம்பரம் முருகேசன் காசிமேடு காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளராக வந்த பிறகுதான், அந்த பகுதியில் கொலை போன்ற குற்றங்கள் குறைந்ததாகவும் பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடிந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். சினிமாவில் வருவது போன்ற இந்த சம்பவம் சென்னை காசிமேடு பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.