பாட்டுப்பாடியபடி மரணித்த தந்தை – தந்தையின் இறப்பை மறைத்து மகளுக்கு திருமணம்

1414

கேரள மாநிலத்தில் மகளின் மணவிழா கச்சேரியில் பாடி மயங்கி விழுந்த தந்தை இறந்த செய்தி மறைக்கப்பட்டு திருமணம் நடந்தேறியது.

இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து மகளின் திருமணத்தை நடத்திய உறவினர்கள்

மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாடும் விஷ்ணுபிரசாத்

கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 55).இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

இளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினார். கொல்லத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தனது மகளுக்கு வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தார். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறத் தொடங்கின.

திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்தது. கடைசி மகளின் திருமணம் என்பதால் விஷ்ணு பிரசாத் செலவைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இசைக்கச்சேரியில் பாடகர்கள் பாடிக்கொண் டிருந்த போது விஷ்ணு பிரசாத்தின் நண்பர்கள் சிலர் அவரையும் பாடல் பாடும்படி கூறினார்கள். விஷ்ணுபிரசாத் நன்றாக பாடக்கூடியவர் என்பதால் அவரும் அதை ஏற்று ஒரு பாடலை உற்சாகமாக பாடத் தொடங்கினார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மேடையில் மயங்கி சரிந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தந்தையின் நிலையைப் பார்த்து ஆர்ச்சாவும் கதறி அழுதார்.

அவருக்கு ஆறுதல் கூறிய உறவினர்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடரும்படி கூறிவிட்டு, உடனடியாக விஷ்ணுபிரசாத்தை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

 மணக்கோலத்தில் சோகத்தோடு ஆர்ச்சா

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மறுநாள் திருமணம் என்ற நிலையில் விஷ்ணுபிரசாத் இறந்த தகவலை அவரது மகளிடம் தெரிவித்தால் அவரால் அந்த துக்கத்தை தாங்க முடியாது என்பதாலும் அதன் மூலம் விஷ்ணுபிரசாத் ஆசை, ஆசையாக தனது மகளுக்கு நடத்த திட்டமிட்ட திருமணம் தடைபடும் என்பதாலும் அந்த தகவலை ஆர்ச்சாவிடம் தெரிவிக்காமல் மறைக்க கனத்த மனதுடன் உறவினர்கள் முடிவு செய்தனர்.

 

அதன்படி ஆர்ச்சாவிடம் தந்தை நலமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு அவர் வந்துவிடுவார் என்று கூறி சமாதானம் செய்தனர். அதன்பிறகு நேற்று திட்டமிட்டபடி ஆர்ச்சாவுக்கு திருமணமும் நடைபெற்றது.

தனது கழுத்தில் தாலி ஏறும் வரை தந்தை திருமண மண்டபத்திற்கு வரவில்லை என்பதால் அவரை மகள் கலங்கிய கண்களுடன் தேடிக் கொண்டே இருந்தார். மணமகனும், உறவினர்களும் அவரது தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி திருமணத்தை நடத்தி முடித்தனர்.

அதன் பிறகே ஆர்ச்சாவிடம் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமணம் நடந்து புதிய வாழ்க்கை தொடங்கும் சந்தோ‌ஷத்தை அனுபவிக்கும் முன்பு தனக்கு நல்ல கணவரை தேர்ந்தெடுத்து கொடுத்த தந்தை திருமணத்தை காணும் முன்பே மரணமடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆர்ச்சா கதறி அழுதது அங்கு கூடியிருந்த அனைவரையும் உருக்குவதாக இருந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of