நாட்டிற்கு வழி காட்டியாக திகழும் ஒற்றுமை

670

ஒரு வார தொடர் மழை, காணும் திசையெங்கும் வெள்ளம், போதாத குறைக்கு நிலச்சரிவும் கூட…. இது தான் இன்றைய கேரளாவின் நிலை. இருப்பினும் எந்த குறையும் இன்றி நிவாரணப் பணிகளும், மீட்புப் பணிகளும் நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது ஒற்றுமை..

நாட்டிற்கு வழி காட்டியாக திகழும் ஒற்றுமை குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கேரளாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மலப்புழா, நிலாம்பூர், இடுக்கி, வயநாடு, ஆழப்புழா, மூணாறு, கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் சிதைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நிலச்சரிவு காரணமாகவும் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைவதும், வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது.

கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஏராளமான உயிர்கள் மாண்டுள்ள நிலையில் கேரள அரசுக்கு தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இதுவரை 8,000 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உடனே நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் கட்சி பேரமின்றி நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே அரசியல் என்றால் ஆளும்கட்சியை, எதிர்க்கட்சி குறை கூறுவதும், எதிர்க்கட்சியை ஆளுங்கட்சி குறை கூறுவது தான் அரசியலின் மரபாக மாறியுள்ளது. தேர்தலில் தொடங்கி இயற்சை சீற்றங்கள் வரை இதே நிலை தான் நீடிக்கின்றன.

டெல்லி அரசியல் முதல் மாநில அரசியல் வரை எதற்கெடுத்தாலும் கட்சிகள் மாறிமாறி குறை கூறுவது சமீபத்தில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நடைமுறையில் இருந்து சற்று அல்ல, அதிகமாகவே மாறியுள்ளது கேரள அரசியல்.

ஆளுங்கட்சியாக மார்க்சிஸ்ட்டும், எதிர்க்கட்சியாக காங்கிரஸூம் இருந்து வரும் நிலையில், எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பாரபட்சமின்றி செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அனைத்து பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சியுமான காங்கிரஸ் தொண்டர்களும் இணைந்தே மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் எந்தவித அரசியலும் செய்யக் கூடாது என கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா அறிவுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்ய சென்ற போது, ரமேஷ் சென்னிதலாவும் உடன் சென்றது இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது.

கேரள அரசியலில் எத்தனையோ மனஸ்தாபங்களும், குற்றச்சாட்டுகளும் இருக்கும் நிலையில், மக்களை காக்கும் பணியில் ஒன்றிணைந்து அனைத்து கட்சிகளும் செயல்படுவது அனைத்து மாநில அரசுகளையும் வியப்படைய வைத்துள்ளது.

நல்லதை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனைத்து மாநில அரசுகளும் இதை பின்பற்ற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது. நாட்டிற்கே வழி காட்டியுள்ள கேரள அரசியல் தலைவர்களுக்கு சத்தியம் தொலைக்காட்சி வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.

சத்தியம் தொலைக்காட்சிக்காக செய்திக்குழு…