சாகுபடிக்கு கொடிமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படும் – முதல்வர்

124

நெல்லை மாவட்டத்தில் உள்ள கொடிமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடும்படி நெல்லை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கொடிமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை மறுநாள் முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என உறுதியளித்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரத்து 780 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூலை பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.