அவர் பெயரை சொல்ல கூட மோடிக்கு தகுதி இல்லை.., கே.எஸ் அழகிரி காட்டம்

420

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது,

இந்தியாவிலேயே வருகிற பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மக்களிடையே எதிர்ப்புணர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தேர்தல் அறிவிப்பு வெளியிட இருக்கிற ஒருசில நாட்களுக்கு முன்பாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே கவர்ச்சிமிக்க திட்டங்களை மக்கள் நலத்திட்டங்கள் என்ற போர்வையில் எந்தவிதமான நிதியும் ஒதுக்காமல் அறிவித்து வருகிறார். இதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.பிரதமர் மோடி உரையின் தொடக்கத்திலேயே தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பேசுகிறார். ஆனால் இவர் பங்கேற்கிற எந்த நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் பாட வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதில்லை. இதன் மூலம் தமிழ்தாயை இழிவுபடுத்தி வருகிறார்.

அதேபோல, தேசபக்தி குறித்து ஊருக்கு உபதேசம் செய்கிற நரேந்திர மோடி பங்கேற்கிற நிகழ்ச்சியில் தேசியகீதம் பாடப்படுவதில்லை. இதன்மூலம் தேசபக்தியை கொச்சைப்படுத்தி வருகிறார்.

மோடி தமது உரையில் பெருந்தலைவர் காமராஜரை மத்திய காங்கிரஸ் தலைமை அவமதித்து விட்டதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி புலம்பியிருக்கிறார். மகாத்மா காந்திக்கும், பெருந்தலைவர் காமராஜருக்கும் இருந்த உறவை நரேந்திர மோடியால் புரிந்து கொள்ள முடியாது.

மூத்தறிஞர் ராஜாஜி மீது பெருந்தலைவர் காமராஜர் வைத்திருந்த மதிப்பும், மரியாதையையும் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1966-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத வெறியர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் அன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் தங்கியிருந்த ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

வன்முறையாளர்கள் பெருந்தலைவர் காமராஜரை கொலை வெறி தாக்குதலோடு வீட்டிற்குள் புகுந்த போது பெருந்தலைவர் காமராஜர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

அன்று பெருந்தலைவர் காமராஜரை கொல்ல சதித்திட்டம் தீட்டியபோது தந்தை பெரியார் கத்தியை எடுப்போம், காமராஜரை காப்போம், கோட்சே கும்பல் கொட்டத்தை கூண்டோடு கருவறுப்போம் என்று ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் முழங்கியது நரேந்திர மோடிக்கும் தெரியாது, இன்றைய அ.தி.மு.க. தலைமைக்கும் தெரியாது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பாரம்பரியத்தில் வந்த நரேந்திர மோடிக்கு காமராஜரின் பெயரை உச்சரிக்க கூட தகுதி கிடையாது.

தமிழக மக்களை கவருவதற்காக அ.தி.மு.க. துணையோடு பல்வேறு ஜால வித்தைகளை செய்து வரும் நரேந்திர மோடியை தோலுரித்து காட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிகிறார்.

அந்த கூட்டத்தில் நரேந்திர மோடியின் வாதங்களை காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் மக்கள் மன்றத்தில் முறியடித்துக் காட்டுவார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of