குதிரைபேர ஆதாரத்தை வெளியிடுவேன் – எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை

720

ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிடவில்லை என்றால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுடன் குதிரைபேரத்தில் ஈடுபட்ட ஆதாரத்தை வெளியிடுவேன் என எடியூரப்பாவுக்கு கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து சுமார் 4 மாதங்களே ஆகின்றன. ஆனால், கர்நாடகா அரசியலில் புதுப்புது குழப்பங்கள் உருவாகி வருகின்றன.

எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு, ஆபரேஷன் தாமரை என்ற பெயரில், குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆட்சியை காப்பாற்ற முதலமைச்சர் குமாரசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தை பாஜக தலைவர் எடியூரப்பா கைவிட வேண்டும் என்றும் இல்லையெனில் அவருக்கு எதிரான ஆதாரங்களை வெளியிடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.விடம் எடியூரப்பா செல்போனில் பேசி குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆடியோவை பகிரங்கப்படுத்துவேன் என்றும் குமாரசாமி தெரிவித்தார். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவினரின் கனவு பலிக்காது என அவர் கூறினார்.

Advertisement