537 ஆண்டுகள் பழமையான, கவசம் கொண்ட வாகனம்.

306
davinchi-26.02.19

முதன்முதலில் 1898ம் ஆண்டு F.R சிம்ஸ் என்பவர் பெட்ரோலை கொண்டு இயங்கும் கவசம் கொண்ட கார்களை கண்டுபிடித்தார். பின்னர் 1901ம் ஆண்டு முதல், அந்த கவசம் கொண்ட கார்களில் ஆயுதங்களை பொருத்தி அப்போது நடந்த சண்டைகளிலும், போர்களிலும் அவற்றை போர்கருவிகளாக பயன்படுத்தினர்.

ஆனால் சிம்ஸ் இந்த வாகனத்தை கண்டறிவதற்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் கவசமும், ஆயுதமும் கொண்ட கார்களுக்கு வித்திட்டார் என்றால் நம்பமுடிகிறதா ?. அவ்வாறு வித்திட்டவர் தான் லியோனார்டோ டா வின்சி, ஓவியம், சிற்பக்கலை, அறிவியல், பொறியியல், உடற்கூற்றியல், கட்டிடக்கலை என்று பல துறைகளில் சாதித்தவர் டா வின்சி.

டா வின்சி 1482ம் ஆண்டு Duke of Milanக்கு அனுப்பிய வேலைக்கான விண்ணப்பத்தில், தான் ஒரு இயந்திரத்தை வடிவமைத்துள்ளேன், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். அவர் கண்டறிந்த தொழில்நுட்பத்தில் உள்ள வண்டியில் ஒரு வட்ட சட்டத்தில் சிறு ரக பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும், அந்த வாகனத்தால் முழுமையாக 360 டிகிரி கோணத்தில் எந்தப்புறமும் செல்ல சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும். ஆமையின் ஓடு போன்ற இரும்பினாலான கூடு போன்ற அமைப்பால் மூடப்பட்டிருக்கும்.

இந்த வாகனம் போன்ற தொழில்நுட்பங்கள் தற்கால விஞ்ஞானத்திற்கு சர்வசாதாரணமாக இருந்தாலும், இவர் கண்டறிந்த வேறு பல படைப்புகள் தற்கால விஞ்ஞானத்தால் கூட செயல்பாட்டிற்கு கொண்டுவர முடியாது அளவிற்கு பொறியியலின் உச்சத்தில் உள்ளது என்பது அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மை.