உள்ளாட்சி தேர்தல்: இன்று இறுதி முடிவுகள் தெரியும்…! – மாநில தேர்தல் ஆணையர்

302

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை தொடங்கி நள்ளிரவுக்குப் பிறகும் நீடித்தது.

இறுதி முடிவுகள் வெள்ளிக்கிழமைதான் தெரியும் என மாநிலத் தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி தெரிவித்தார்.

கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி இடங்களில் அதிமுகவும் திமுகவும் மாறி, மாறி முன்னிலை வகித்து வருகின்றன.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு மட்டும் கடந்த 7-ஆம் தேதியன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்ப நேரடித் தேர்தல் நடைபெற்றது.

இதில், 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 5 ஆயிரத்து 90 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில், 18 ஆயிரத்து 137 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 410 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 23 பதவியிடங்களுக்கும் என மொத்தம் 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை காலை எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக 315 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து அவை எடுக்கப்பட்டு வாக்குச் சீட்டுகள் கொட்டப்பட்டன.

வண்ணங்களின் அடிப்படையில் வாக்குச் சீட்டுகள் பிரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்தப் பணிகள் நண்பகல் வரை நடந்தது. இதன்பின்பு, ஒவ்வொரு பதவியிடங்களுக்கான வாக்குகளும் தனித்தனியாக எண்ணப்பட்டன.

அந்த அடிப்படையில், கட்சி சார்பில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளைப் பிடிப்பதில் இரு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களிடையே சரிசமமான போட்டி நிலவியது.

சில நேரங்களில் அதிமுகவும், சில நேரங்களில் திமுகவும் என இரண்டு முக்கிய பதவியிடங்களைப் பிடிப்பதில் இரு கட்சிகளும் முன்னிலை வகித்திருந்தன.
மொத்தமுள்ள 91 ஆயிரம் உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணப்பட்டப் பிறகு அதிகாரப்பூர்வ முறையில் முடிவுகளை மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி வெறும் 10 சதவீத அளவிலான பதவியிடங்களுக்கு மட்டுமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 571 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அவற்றில், அதிமுக 196 இடங்களையும், திமுக 256 இடங்களையும் கைப்பற்றியதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த முடிவுகள் எதையும் இரவு வரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை இரவு முழுவதும் எண்ணப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகே இறுதி முடிவுகள் வெளியாகும் என மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணும் பணியில் அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமையும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் நான்கு வகையான பதவியிடங்களுக்கு நடந்த தேர்தல்களின் முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலையே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.