சிபிஐ இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்று பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார்

363

சிபிஐ இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும் புதிய தலைவரை நியமிக்க உயர்மட்ட குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த சில தின்ங்களுக்கு முன் சிபிஐ இயக்குனராக அலோக் வர்மாவை உச்சநீதிமன்றம் மீண்டும் நியமனம் செய்தது. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இறுதி முடிவு எடுக்க பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அலோக் வர்மா குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்கியது.

அதன் பின் இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து மக்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் சுதந்திரமான தலைவரின் கீழ் சிபிஐ இயங்குவதை கண்டு பயப்படுவது போல், அரசின் செயல்பாடுகள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும் புதிய தலைவரை நியமிக்க, உயர்மட்ட குழு கூட்டத்தை உடனடியாக பிரதமர் கூட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் நடந்ததை மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும், அப்போதுதான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் முடிவுக்கு வரும் என்று மல்லிகார்ஜூனா கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.