புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் – பல்கலைக்கழக மானிய குழு

218

புதுச்சேரி கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, வரும் 21ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வுகளை மாணவர்கள் விருப்பப்படி, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின்படி, தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களை பார்த்து தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மாணவர்களிடம் உள்ள குறிப்பு பொருட்களை யாரும் பரிமாறாமல் இருப்பதை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்வார்கள் என்றும், தேர்வுகளின் காலம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பழைய முறைப்படி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனின் தேர்வு எழுதும் மாணவர்கள் ஏ4 வெள்ளைத்தாளில் கருப்பு மை கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்றும், தேர்வு எழுதிய அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.