தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகள் பறிமுதல்

450

நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் அணைத்து இடங்களிலும் அதிரடி வாகன சோதனை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர்.

பேராவூரணி அடுத்த காரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர் வில்சன் தலைமையில் ஏட்டுகள் பாரதிதாசன், காந்தி ஆகியோர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியின் பின்புறத்தில் பீடி பண்டல்கள் இருந்தது. அதன் நடுவில் ஒரு சிறிய பெட்டி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் தாமரை உருவம் பொறித்த 133 வெள்ளிக்காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் இலங்காபுரி பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (33) என்பதும் அவர் பட்டுக்கோட்டையை நோக்கி பீடி பண்டல்களை ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.

அவர் கொண்டு வந்த வெள்ளிக்காசுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்காசுகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா? தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளதால் பா.ஜனதாவினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of