மெட்ராஸ் ஐ நோய்..! ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..? நோய் குறித்து முழு தகவல்..!

1363

தற்போது வேகமாக பரவிவரும் ‘மெட்ராஸ் ஐ’-யின் வகைகள் குறித்தும், அதற்கான அறிகுறிகள் குறித்தும் தெளிவாக விவரிக்கிறது, இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு.
சென்னையில் தற்பொழுது மெட்ராஸ் ஐ என்ற கண்களில் தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த மெட்ராஸ் ஐ நோயை உலகில் 2-வது பழமையான கண் மருத்துவமனையான சென்னை எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் கிரிக் பேட்ரிக் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். அதனால் தான் இதற்கு மெட்ராஸ் ஐ என்றே பெயர் வைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே ‘மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படுகிறது. இந்த மெட்ராஸ் ஐ என்ற கண் நோய்த் தொற்றானது எளிதில் பரவக்கூடியது, குழந்தைகளையும் எளிதில் தாக்க கூடியது.

பள்ளியில், விளையாட்டு மைதானங்களில், டியூஷன் மையங்கள் மற்றும் அடிக்கடி சென்று வரும் பிற இடங்களிலிருந்து இந்தத் கண் தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளது. இந்த மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் தொற்றானது மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று பருவ காலத்தில் ஏற்படுகிற ஒவ்வாமை. இது தூசி, புகை உள்ளிட்டவற்றால் இந்த நோய்தொற்று ஏற்படும்.

இரண்டாவது நுண்ணுயிரி அல்லது நச்சுயிரி தொற்றுகளால் ஏற்படுவது. மூன்றாவது ஷாம்பு, அழுக்கு, நீச்சல் குளத்திலுள்ள குளோரின் போன்ற எரிச்சலூட்டிகளின் காரணமாகவும் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது.

இந்தப் பாதிப்புள்ளவர்களுக்குக் கண்ணில் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் நீர் சுரந்துகொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்றவை அறிகுறிகளாக சொல்கின்றனர் கண் மருத்துவர்கள்.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். மெட்ராஸ் ஐ யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய சுகாதாரம் மிகவும் அவசியம். கண்ணில் மருந்து போட்டுக்கொண்டாலோ, கண்ணில் கை வைத்தாலோ உடனடியாக கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. கண்களை தினமும் கழுவி சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். ஏற்கனவே பயன் படுத்திய கண் அலங்காரபொருட்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே டெங்கு,மற்றும் மற்ற வைரஸ் காய்ச்சல்கள் ஒருபுறம் மக்களை மிரட்டி கொண்டிருக்க தற்பொழுது இந்த மெட்ராஸ் ஐ யும் மக்களிடையே வேகமாக பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மெட்ராஸ் ஐ என்ற கண் தொற்றானது எளிதில் குணப்படுத்த கூடிய நோய் என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்தால் பார்வையில் தெளிவின்மை ஏற்பட வாய்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of