பொன் மாணிக்கவேலின் பதவியை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

274

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தும் பொன்.மாணிக்கவேலின் சிறப்பு அதிகாரியாக ஓராண்டு பதிவியில் தொடர்வார் என்றும் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் விசாரித்து வந்தார். இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக, அரசாணை வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ அமைப்பிடம் அனுமதி பெறாமல் அரசாணை பிறபித்தது ஏன் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது மட்டுமின்றி இன்று ஓய்வு பெற இருந்த பொன் மாணிக்கவேலின் பதவிக்காலத்தையும் ஓராண்டுக்கு நீட்டித்து சிறப்பு அதிகாரியாக தொடர்வார் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.