மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கூடாது

1091

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பிடிபட்டால், திரும்ப ஒப்படைக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை : இடையாத்திமங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டியராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

மேம்பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், வெள்ளாறு ஆற்று படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆற்று படுகையில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்படுவதை குறிப்பிட்ட நீதிபதிகள், இனிமேல் பிடிபட்டால் எந்த வாகனமாக இருந்தாலும் திரும்ப ஒப்படைக்க கூடாது என உத்தரவிட்டனர்.

மாட்டு வண்டியாக இருந்தால், மாடுகளை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டு வண்டியை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரி நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தால், அவற்றை விடுவிக்க ஆர்வம் காட்டக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த உத்தரவை உள்துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மணல் திருட்டு தொடர்பான வழக்கில், தமிழக உள்துறை செயலாளரை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்ப்பதாக அறிவித்தனர்.