2020 ஆம் ஆண்டுக்குள் மதுக்கடைகள் மூடப்படுமா? மதுரை ஐகோர்ட்

144

விருதுநகரைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக-வினர் தேர்தல் அறிக்கையில் 2020 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் முழுவதும் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகின்ற 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட வேண்டும். என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை மது உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன?

ஆண்டுதோறும் எவ்வளவு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகிறது? அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி 2020-ம் ஆண்டுக்குள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.