“அவருக்கு கொரோனா இருக்கு..” பரவிய வதந்தி..! இறுதியில் நேர்ந்த சோகம்..!

643

கொரோனா வைரஸ் பரவுவதை கூட தடுத்து விடலாம், ஆனால், கொரோனா தொடர்பாக பரவும் வதந்திகளை தடுப்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. இந்த வதந்திகளின் காரணமாக பல்வேறு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இளைஞர் ஒருவரின் உயிரே பறிபோன சம்பவம் மதுரையில் நிகழ்ந்திருக்கிறது.

கொரோனா அச்சம் காரணமாக வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில், கேரளாவில் கூலி வேலை செய்து வரும் முஸ்தபா என்பவர் அவரது சொந்த ஊரான வில்லாபுரத்திற்கு வந்திருக்கிறார்.

அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால், அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளனர். அதன்படி, முஸ்தபாவின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், அவரை கொரோனா பரிசோதனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

அதில், கொரோனா இல்லை என்பது உறுதியானதும், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஆனால், அக்கம் பக்கத்தினர், முஸ்தபாவிற்கு கொரோனா இருப்பது உறுதியாகிவிட்டது என வதந்தியை பரப்பியுள்ளனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான முஸ்தபா, சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முஸதபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement