தேர்தல் பிரச்சார சுவாரஸ்யம்: சட்டையில் அவரு.., போட்டோல மட்டும் இவரு..,

497

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்து வரும் மு.க. ஸ்டாலின் நேற்றிரவு மதுரையில் தங்கினார். அவர் இன்று அதிகாலையில் மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனுடன் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது பலரும் மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மு.க. ஸ்டாலின் சிரித்தப்படியே நின்று புகைப்படமெடுக்க ஒத்துழைத்தார். அப்போது மு.க. ஸ்டாலின் அணிந்திருந்த அதே மஞ்சள் கலர் பனியனுடன் ஒரு இளைஞர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.அவருடனும் மு.க. ஸ்டாலின் சிரித்தபடி செல்பி எடுக்க ஒத்துழைத்தார். ஆனால் அந்த இளைஞர் பனியனில் மு.க அழகிரியின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை மு.க ஸ்டாலின் கவனித்தாரா? என்பது தெரியாது. ஆனால் இந்த படம் திமுகவினர் எடுத்த மற்ற படங்களுடன் வெளியானது.

இந்த படத்தில் உள்ள மு.க. அழகிரி உருவம் பொறித்த பனியன் அணிந்த இளைஞருடன் மு.க. ஸ்டாலின் செல்பி எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் நகைச்சுவையாக வைரலாகி வருகின்றது.

Advertisement