சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து மலேசிய மணல் விற்பனை தொடங்கும்

984

சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து மலேசிய மணல் விற்பனை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசு மணல் இணையசேவை மூலம் இதற்கான முன்பதிவைச் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாடு மணல் இணைய சேவை தளம் மற்றும் கைபேசி செயலி மூலம் இறக்குமதி மணல் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரு யூனிட் மணலின் விலை 9 ஆயிரத்து 990க்கு விற்பனை செய்யப்படும் என்றும், 2 யூனிட் மணல்19,980 ரூபாய்க்கும், 3 யூனிட் மணல் 29,970 ரூபாய்க்கும், 4 யூனிட் மணல் 39,960 ரூபாய்க்கும், 5 யூனிட் மணல் 49,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் இருந்து 57 ஆயிரம் டன் மணலை ஏற்றிக்கொண்டு வரும் கப்பல் இந்த மாத இறுதியில் எண்ணூர் துறைமுகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணூருக்கு மணல் வந்தவுடன் சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து விற்பனை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement