காலாவதி பிரதமரை எதற்கு சந்திக்க வேண்டும்.., மம்தா

479

‘பானி’ புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி பேச முன்வராத நிலையில், நேற்று கலைக்குண்டா என்ற இடத்தில் இருவரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதையும் மம்தா நிராகரித்தார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில்,

‘பானி’ புயல் பாதிப்புக்கென பிரத்யேகமாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தால், அதில் பங்கேற்பது பற்றி பரிசீலனை செய்திருப்பேன். ஆனால், மோடி தேர்தல் பிரசாரத்துக்காக இங்கு வந்துள்ளார்.

எனவே, ‘காலாவதி’ பிரதமருடன் ஒரே மேடையில் பங்கேற்க மாட்டேன். நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், இழப்பீடு அளிக்கவும் எனது அரசுக்கு திறன் உள்ளது. மத்திய அரசின் உதவி தேவையில்லை. தேவைப்பட்டால், புதிதாக பதவி ஏற்கும் பிரதமரிடம் பேசிக்கொள்வோம்.

இதற்கு முன்பு, மோடியை 2 தடவை சந்தித்து நிதி கேட்டேன். ஆனால், மோடி அரசு எதுவுமே செய்யவில்லை. நான் கடந்த 48 மணி நேரமாக காரக்பூரில் இருந்தேன். ஆனால், டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்குதான் போன் செய்துள்ளனர்.

மேலும், கூட்டாட்சி முறையை புறக்கணிக்கும் வகையில், என்னுடன் ஆலோசிக்காமல், நேரடியாக தலைமை செயலாளர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். முதல்-மந்திரியின் கீழ்தான் தலைமை செயலாளர் இயங்குவது தெரியாதா? என தெரிவித்தார்.

Advertisement